இந்தியா முழுவதும் இன்று 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றிய நிகழ்ச்சியை எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் புறக்கணித்தது பேசுபொருளாகியது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தனது எக்ஸ் பக்கத்தில், ராணுவத்தையும், அரசியல் அமைப்பையும் ராகுல் காந்தி அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாகிஸ்தானை விரும்பும் ராகுல் காந்தி, தேசத்தையும் காந்தியையும் அவமதித்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பது தேசிய தினம் எனவும் இது தனிநபரின் பிறந்த நாளோ அல்லது கட்சி தொடங்கிய நாளோ இல்லை எனவும் பதிவிட்டுள்ளார். இந்த நிராகரிப்பு மூலம் காங்கிரஸ் கட்சி இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ் மற்றும் இத்தாலி தேசிய காங்கிரஸ் என்பதை நிரூபித்துள்ளதாகவும் பூனவல்லா விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது டெல்லி செங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்குக் பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.
டெல்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில், அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்றார்.
இந்தச் சூழலில் தான் பாஜக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செங்கோட்டை நிகழ்ச்சியை புறக்கணித்தது குறித்து விமர்சித்துவருகிறது. ஒரு பக்கம் பாஜகவினர் விமர்சித்துவரும் வேளையில், மழையில் நனைந்தபடியே தேசிய கொடி ஏற்றத்திற்கு மரியாதை செலுத்தி, தேசிய கீதம் பாடிய ராகுல் காந்தியின் வீடியோவும் இணையத்தில் டிரெண்ட் ஆகிவருகிறது.
இன்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வின் போது மழை பெய்தது. அந்த மழையில் நனைந்தபடியே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்தி, தேசிய கீதத்தையும் பாடினார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
August 15, 2025 8:41 PM IST
சுதந்திர தின விழா; செங்கோட்டைக்கு வராததை விமர்சிக்கும் பாஜக.. இணையத்தில் வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ!

