Last Updated:
அந்த நபரைக் தொடர்ந்து அடுத்தடுத்த சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தபோது போலீசாரே அதிர்ந்து போகும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது.
பங்கு வர்த்தகத்தில் 30 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பெண் ஆண் வேடமிட்டு, மும்பையில் உள்ள தனது சகோதரி வீட்டில் நகை பணத்தை திருடிச் சென்ற நிலையில், போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கியிருக்கிறார்.
குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் 27 வயதான ஜோதி பனுசாலி. இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று நிஷா வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது மாமியார் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் கதவைத் தட்டியிருக்கிறார்.
நிஷாவின் மாமியார் வெளியே வந்து கதவைத் திறக்க, வீடு வாடகைக்கு இருக்கிறதா? எனக் கேட்டு பேச்சு கொடுத்துள்ளார். இல்லை எனக் கூறியதும், வீட்டில் உள்ள பாத்ரூமை பயன்படுத்திக் கொள்ளலாமா? என அனுமதி கேட்டுள்ளார். மூதாட்டியும் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கொடுத்ததும், உள்ளே சென்ற அந்த நபர் பாத்ரூமில் தண்ணீர் கசிவு இருப்பதாக மூதாட்டியிடம் தெரிவித்தார்.
உடனே மூதாட்டி பாத்ரூம்பிற்குள் சென்று பார்க்க, அவரை உள்ளேயே வைத்து பூட்டிய அந்த நபர், வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்று விட்டார். மூதாட்டியின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர். வீட்டைச் சோதித்துப் பார்த்தபோது அங்கு இருந்த நகை மற்றும் வெள்ளி திருடுபோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மூதாட்டியின் வீட்டில் தாடி வைத்திருந்த நபர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தார். அந்த நபரைக் தொடர்ந்து அடுத்தடுத்த சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்தபோது போலீசாரே அதிர்ந்து போகும் அளவுக்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. ரயில் நிலையம் அருகே சென்ற அந்த நபர் திடீரென முகத்திலிருந்த தாடி மற்றும் உடைகளை மாற்றி பெண்ணாக உரு மாறியிருக்கிறார்.
பின் அங்கிருந்து ரயிலில் ஏறிய அந்த பெண் குஜராத் மாநிலம் நவ்சாரி என்ற இடத்தில் இறங்கியிருக்கிறார். அப்பெண்ணின் சிசிடிவி புகைப்படத்தை, திருடுபோன வீட்டிலிருந்த நிஷாவிடம் காட்டியதுபோது அது தனது சகோதரி ஜோதி பனுசாலி எனக் கூறி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துள்ளார். உடனே அப்பெண்ணை தேடிச் சென்ற போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் பங்கு வர்த்தகத்தில் 30 லட்சம் ரூபாயை இழந்து விட்டதாகவும், தனது அடகு நகைகளை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாலும் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிவித்துள்ளார். திருட்டு நடந்து 12 மணி நேரத்தில் ஜோதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Mumbai,Maharashtra
August 15, 2025 7:03 PM IST
ஆண் வேடமிட்டு சகோதரி வீட்டிற்கு சென்ற பெண்.. அடுத்து நடந்த அதிர்ச்சி.. போலீசாருக்கே ஷாக் கொடுத்த சம்பவம்!


