Last Updated:
டெல்லி செங்கோட்டையில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பாகிஸ்தான் பயங்கரவாத முகமைகள் மீது தாக்குதல் குறித்து பேசினார்.
நாட்டின் 79 ஆவது சுதந்திரத் தினத்தை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதை தொடர்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களை பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார்.
இந்தியாவின் 79 ஆவது சுதந்திரத் தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திரத் தின விழாவில், பிரதமர் மோடிக்கு 96 வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.இதனையடுத்து, 22 குண்டுகள் முழங்க, விமானப்படையின் எம்.ஐ.17 விமானம் மூலம் மலர் தூவ, பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியதும், தேசிய கொடியுடன், ஆபரேஷன் சிந்தூர் கொடியையும் ஏந்தியவாறு போர் விமானங்கள் வானில் பறந்தன.
இதையடுத்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, 140 கோடி இந்தியர்களும் இன்று பெருமையுடன் மூவர்ணக் கொடியை அணிந்துள்ளனர். மூவர்ண கொடி என்பது வெறும் கொடியல்ல. அது நமது பெருமை. கடந்த 75 ஆண்டுகளாக அரசியல் சாசனம் நம்மை வழிநடத்தி வருகிறது. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளை ஒழிக்க நம் பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நிகழ்த்திய நம் வீரர்களுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள். நம்முடைய தீரம் மிக்க வீரர்கள் பயங்கரவாதிகளையும், அவர்களை பின்னிருந்து இயக்கியவர்களை தண்டித்துள்ளனர்.
பாகிஸ்தான் பயங்காரவாத முகமைகள் மீது நாம் நடத்திய தாக்குதல் குறித்து புதுப்புது தகவல் நாள்தோறும் வருகின்றன. பாகிஸ்தானின் அனு ஆயுத மிரட்டல்கள பொறுத்துக்கொள்ள போவதில்லை என முடிவு செய்துள்ளோம். அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இந்தியாவிற்கு ஒரு போதும் அழுத்தம் இல்லை. சிந்து நிதி நீர் ஒப்பந்தம் எவ்வளவு நியாயமற்றது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறனே் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
August 15, 2025 8:46 AM IST


