Last Updated:
உத்தர பிரதேசத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், 15 மாத பெண் குழந்தையை, பராமரிப்பு பணியில் இருந்த பெண் பெண் கொடூரமாக தாக்கி, கடித்து வைத்த சம்பவம் தாய்மார்களை குலைநடுங்க வைத்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில், தங்கியுள்ள தம்பதிகள் பெரும்பாலும் இருவருமே வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது அவர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காகவே, அந்த குடுயிருப்பு வளாகத்தில் டேக்கேர் எனப்படும் குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தனியார் சார்பில் நடத்தப்படும் மையத்தில் 15 மாத பெண் குழந்தையை, பெற்றோர் விட்டுச் சென்றுள்ளனர்.
அண்மையில் அந்த குழந்தையின் உடலில் திடீரென தழும்புகள் தென்பட்டுள்ளன. அதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஏதோ அலர்ஜி ஏற்பட்டதாக நினைத்து அசால்ட்டாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அலர்ஜியால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர் இது அலர்ஜியால் ஏற்பட்ட புண் இல்லை என்றும், கிள்ளி வைத்து, கடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், நேராக குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர்.
பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது தான், பிஞ்சுக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சம்பவத்து அன்று குழந்தையை பெற்றோர், டேக்-கேரில் விட்டுச் சென்றதும் அழுது கொண்டே இருந்துள்ளது. உடனே, அந்த குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு பெண் ஊழியர் முயற்சித்துள்ளார். ஆனால், தொடர்ந்து குழந்தை அழுத்ததால் ஆத்திரமடைந்த பெண், பிளாஸ்டிக் பேட்டை எடுத்து தலையிலும், நெற்றியிலும் அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை மேலும் கதறி அழுதுள்ளது. அப்படியும் மனம் இறங்காத பெண், பிஞ்சுக் குழந்தையை தரையில் போட்டு எடுத்ததுடன், சறுக்கலில் விட்டு கொடுமைப் படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் மிருகமாக மாறிய பெண், ஈவுஇரக்கமின்றி குழந்தையை கிள்ளியும், கடித்தும் காயப்படுத்தியுள்ளார். அப்போது, வலியால் குழந்தை புழுவாய் துடித்து அழுததை கண்டு, பெற்றோர் ரத்தக் கண்ணீர் சிந்தியுள்ளனர். டேக் கேர் மையத்தில் பணியாற்றும் பெண்ணின் கொடூர செயலை கண்டு கொதித்தெழுந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர். இவர், மேலும் வேறு எந்த குழந்தையிடமும் இதுபோன்று அரக்கத்தனமாக நடந்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இளம் பெண்களுக்குப் பதில், நன்கு பக்குவப்பட்ட வயதான பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று குடுயிருப்பு வாசிகள் கோரியுள்ளனர். அப்போது தான், இதுபோன்ற கொடூரங்கள் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில், பெண் ஊழியரே 15 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி, கடித்து வைத்த சம்பவம் தாய்மார்களை குலைநடுங்க வைத்துள்ளது.
Noida,Gautam Buddha Nagar,Uttar Pradesh
August 12, 2025 5:14 PM IST
15 மாத குழந்தையின் கை, கால்களில் திடீரென இருந்த தழும்பு.. சிசிடிவி காட்சிகளை பார்த்த பெற்றறோர் அதிர்ச்சி


