Last Updated:
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி, உக்ரைனில் அமைதி திரும்ப இந்தியா ஆதரவளிக்கும் என்றும், தேவையான உதவிகளை செய்யும் என்றும் உறுதியளித்தார்.
உக்ரைனில் அமைதி திரும்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்றும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிலவிவரும் சூழலில், அதனை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வரும் 15 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனை வரவேற்பதாக இந்தியா அறிவித்த நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிபர் செலன்ஸ்கி, ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல் குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்ததாகவும், இந்த நெருக்கடியான சூழலில் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, போரை விரைவாகவும் அமைதியான முறையிலும் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் குறித்த இந்தியாவின் விருப்பத்தை தெரிவித்ததாகவும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
August 12, 2025 12:23 PM IST


