Last Updated:
பிகார் துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருப்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருந்த விவகாரத்தில் பிகார் துணை முதலமைச்சர் விஜய்குமார் சின்ஹா விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பிகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹாவுக்கு, லக்கிசாராய் மற்றும் பங்கிபூர் என இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை இருப்பதாக பிகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இதையடுத்து இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது குறித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு பங்கிப்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட பிறகும் விஜய்குமார் சின்ஹாவின் பெயர் நீக்கப்படாததற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பா அல்லது துணை முதல்வர் பொறுப்பா என்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், விஜய்குமார் சின்ஹா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது எதிர்க்கட்சியினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியிருந்தார்`
August 11, 2025 5:59 PM IST


