கோலாலம்பூர்,
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான நாட்டின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக 3.0 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
மலேசிய புள்ளிவிவரத் துறையின் தகவலின்படி, ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு குறைந்து, 5,18,700 பேராகச் சரிந்துள்ளது.
புள்ளிவிவரத் துறை தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் கூறியதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக முன்னேறி வருவதால், ஜூன் மாத தொழிலாளர் சந்தை நிலை தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
அவரின் கூற்றுப்படி, மாதாந்திர அடிப்படையில் 0.3 விழுக்காடு அதிகரித்து, ஜூன் மாதத்தில் நாட்டின் தொழிலாளர் எண்ணிக்கை 1 கோடி 74 லட்சத்து 30 ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) மே மாதத்தில் இருந்தது போலவே 70.8 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது.
ஜூன் மாத வேலைவாய்ப்புகள் 0.3 விழுக்காடு உயர்ந்து, 1 கோடி 69 லட்சத்து 20 ஆயிரம் பேராகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.




