உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்காகவே இந்த காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக, இணையத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், நொய்டாவில் திடீரென சர்வதேச காவல் நிலையம் எப்படி முளைத்தது என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே உள்ளூர் போலீசார் சர்வதேச காவல் நிலையத்திற்குள் புகுந்துள்ளனர். அவர்களைக் கண்டதும், அங்கிருந்த இண்டர்போல் போலீசார் ஆடிப் போயுள்ளனர்.
திருடனுக்கு தேள் கொட்டியது போன்று வாயடைத்து நின்ற அவர்களைப் பிடித்து, போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது அவர்களின் உலக மகா மோசடி அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிபாஷ் சந்திரா, பாபுல் சந்திர மண்டல், பிந்து பால் உட்பட 6 பேர் மோசடி வலை பின்னியது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டம் மற்றும் பட்ட படிப்பு படித்த இவர்கள், பக்கா பிளான் போட்டு சர்வதேச போலீஸ் மற்றும் குற்ற புலனாய்வு அலுவலகத்தை நொய்டாவில் திறந்துள்ளனர்.
#WATCH | Noida, Uttar Pradesh: Central Zone Police busts a fake International Police and Crime Investigation Bureau Office. During the operation, they seized multiple fake IDs, stamps, and letterheads. pic.twitter.com/KX08v29LxF
— ANI (@ANI) August 10, 2025
வாடகை கட்டடத்தை அலுவலகமாக மாற்றி தங்களை அரசு அதிகாரிகள் போன்று காட்டிக் கொண்டுள்ளனர். போலி சின்னங்கள், அடையாள அட்டை, ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகள், ஆவணங்கள், சான்றிதழ்களையும் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை, தங்களுக்கு என உருவாக்கிய இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அத்துடன், உள்ளூர் முதல் உலக பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் அதில் கூறியுள்ளனர். அதை பார்த்து உண்மையென நம்பிய பலர், போலி இண்டர்போல் போலீசாரை அணுகி பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், நன்கொடை என்ற பெயரில் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, போலி காவல் நிலையத்தில் இருந்து ஒன்பது செல்போன்கள், 17 அரசு முத்திரைகள், ஆறு காசோலை புத்தகங்கள், ஒன்பது அடையாள அட்டைகள், அமைச்சக சான்றிதழ்கள், பத்திரிகையாளர் அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Noida,Gautam Buddha Nagar,Uttar Pradesh
August 11, 2025 3:03 PM IST
போலி போலீசார், போலி வக்கீல் அல்ல… காவல் நிலையமே போலியாக நடத்தி மோசடி செய்த கும்பல் – உ.பி.யில் பகிர் சம்பவம்!

