Last Updated:
ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் சென்றனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. இதில் இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உணவு மற்றும் தண்ணீர் இன்றி ஒட்டு மொத்த காசா மக்களும் தவித்து வருகின்றனர்.
மேலும் பிணைக் கைதிகளாக பிடித்து வந்தவர்களில் பெரும்பாலானோரை ஹமாஸ் விடுவித்த போதிலும், 29 பேர் மீட்கப்படவில்லை. இவர்களை விடுவிக்க ஹமாஸ் பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. முழுமையான போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இஸ்ரேலிய படைகள் காசாவிலிருந்து வெளியேற வேண்டும். இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்ய வேண்டும், காசா மக்களுக்கு தங்குதடையின்றி உணவு மற்றும் குடிநீர் வழங்க வேண்டும் என ஹமாஸ் இயக்கம் நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், காசா மீது தாக்குதலை தொடர வேண்டும் என்று கூறிய நெதன்யாகு, அந்நகரத்தை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என இஸ்ரேல் ராணுவத்திற்கு உத்தரவிட்டிருந்தார். நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், காசாவை முழுமையாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என ஐ.நா. சபை எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு விட்டால், போரை உடனடியாக நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஜெருசலேமில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “காசாவை ஆக்ரமிப்பது தங்களுக்கு நோக்கம் அல்ல. ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து காசாவை விடுவிப்பதே தங்கள் இலக்கு” என்று நெதன்யாகு தெரிவித்தார்.
August 11, 2025 12:41 PM IST


