Last Updated:
சத்தீஸ்கர் மளிகைக் கடைக்காரர் மணீஷ், ரஜத் படிதாரின் பழைய சிம் கார்டை வாங்கி, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரிடம் இருந்து அழைப்பு பெற்றார்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரருக்கு, புதிதாக வாங்கிய சிம் கார்டு மூலம் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரிடம் இருந்து அழைப்பு வந்த ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், காரியாபண்ட் (Gariaband) நகரைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரர் மணீஷ், அங்குள்ள கடையில் புதிதாக சிம் கார்டு வாங்கி பயன்படுத்தியுள்ளார். அந்த எண்ணில் வாட்ஸ்அப் செயலியை ஆக்டிவேட் செய்தபோது ப்ரபைல் போட்டோவாக ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதாரின் புகைப்படம் இருந்ததைப் பார்த்து வியப்படைந்தார். எனினும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.
ஆனால், அவரது செல்போனுக்கு விராட் கோலி, ஏ.பி டிவில்லியர்ஸ் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ரஜத் படிதாரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். மளிகைக் கடைக்காரரான மணீஷ் வாங்கியது, ரஜத் படிதாரின் பழைய செல்போன் எண் என்பதும், 90 நாட்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படாததால், அந்த எண்ணை செல்போன் நிறுவனம் செயலிழக்கச் செய்து, புதிதாக மணிஷுக்கு விற்பனை செய்துள்ளதும் தெரியவந்தது.
இந்த விவகாரம் ரஜத் படிதாரின் கவனத்திற்குச் சென்றதும், அவரே நேரடியாக மணீஷை தொடர்பு கொண்டு சிம் கார்டை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனை நம்பாத மணீஷ், தான் எம்.எஸ். தோனி பேசுறேன் என்று கிண்டலாகப் பதிலளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரஜத் படிதார் அளித்த புகாரின் பேரில் உள்ளூர் காவலர்கள் மணீஷின் வீட்டிற்கு சென்று விவரத்தை எடுத்துரைத்தனர். தான் பேசியது உண்மையாகவே விராட் கோலி மற்றும் ஏ.பி டிவில்லியர்ஸுடன் தான் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த மணீஷ், உடனடியாக அந்த சிம் கார்டை காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
August 11, 2025 7:03 AM IST


