Last Updated:
ராகுல் காந்தி தலைமையில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணி சென்று, தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் ’இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் பேரணி செல்ல உள்ளனர்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 பேர், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்று, தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, ஓட்டுத்திருட்டுக்கு எதிராக பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வாக்குகள் திருடப்படுவது, ஒரு நபர் – ஒரு ஓட்டு என்ற அடிப்படை கருத்தியலுக்கே எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சரிபார்க்கும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தனது குரலுக்கு வலுசேர்க்க இணையதளம் வாயிலாகவோ, மிஸ்டு கால் மூலமாகவோ ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
August 11, 2025 6:21 AM IST


