Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப் படை பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஏபி சிங் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிப் அதை மறுத்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி ஏபி சிங் தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அஸிப் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்த இந்திய பாதுகாப்புப் படைகள், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்களுக்கு கடும் சேதத்தை விளைவித்தன. தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சண்டை நிறுத்தப்பட்டது. இருப்பினும், ராணுவ மோதலில் யாருக்கு பெரும் சேதம் என்பது குறித்து சர்ச்சை எழுந்தது.
இந்திய ராணுவத்தின் ரபேல் விமானங்கள் உள்ளிட்ட விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறிய குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் விமான தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்களை தாக்கியதற்கான ஆதாரங்களை வெளியிட்டது. அதேநேரம் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் பேசிய இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் செளகான், பாகிஸ்தான் உடனான சண்டையில் இந்திய ராணுவம், போர் விமானங்கள் இழந்ததாக கூறினார்.
தலைமைத் தளபதி அனில் செளகான் கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷ சிந்தூர் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரின. இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் மோதலில் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் கூறினார். இருப்பினும், எந்த நாட்டின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பது குறித்து டிர்ம்ப் விரிவாக கூறாததது சர்ச்சையை கிளப்பியது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. பின்னர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடந்த ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் மத்திய பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, விமானங்கள் குறித்து எதுவும் கூறவில்லை.
இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய, இந்திய விமானப் படை தளபதி ஏபி சிங், பாகிஸ்தான் ராணுவத்தின் 5 போர் விமானங்கள் உள்பட 6 விமானங்களை இந்திய ராணுவம் தாக்கி வீழ்த்தியதாக கூறினார்.
நீண்ட நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் மீண்டும் பிரச்சனையை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு விமானம் கூட இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் தேவைப்பட்டால் இரு நாடுகளின் விமானங்களின் எண்ணிக்கை பொது பார்வையாளரை வைத்து கணக்கீடு செய்யலாம் என்றும் கொக்கரித்துள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்.
தனது சமூக வலைதள பதிவில், எல்லைக் கட்டுபாடு கோடு பகுதியில் இந்திய ராணுவம் எதிர்கொண்ட இழப்புகள் விகித்தாச்சார அடிப்படையில் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
August 10, 2025 6:37 AM IST


