Last Updated:
கர்நாடகாவில் பெண் கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகள் 10 இடங்களில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் பெண்ணை கொடூரமாக கொலை செய்து தலை, கை, கால்கள் என உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி 10 இடங்களில் வீசி சென்ற சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிம்புகனஹள்ளியில் முத்தையாலம்மா கோயில் உள்ளது. இக்கோயில் அருகே அதே ஊரைச் சேர்ந்த சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்று மனித கை ஒன்றை வாயில் கவ்வியபடி ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே நாயை துரத்தி அதனிடமிருந்த மனித கையை மீட்ட மக்கள், அது பெண் ஒருவருடைய கை என்பதை உணர்ந்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.
மனித கையை கண்டு ஊருக்குள் எதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்த போலீசார், சம்பவ இடத்தை பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வந்து சல்லடை போட்டு தேட ஆரம்பித்தனர். அப்போது யாரும் எதிர்பாரா நேரம் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு பாலிதீன் பையில் பெண்ணின் இன்னொரு கையும் கிடைத்தது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சில பாலிதீன் பைகளில் துண்டிக்கப்பட்ட 2 கால்களும், இதயம், வயிறு, குடல் என ஏராளமான உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தொடர் தேடுதலில் கோலால், கொரட்டகெரே, கவுரிபிதனூர் பகுதிகளில் 5 இடங்களில் பெண்ணின் மற்ற உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் 10 இடங்களில் கருப்பு நிற பாலிதீன் மற்றும் துணிப்பைகளில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் மற்ற உடல் பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன. துண்டாக்கப்பட்ட உடல் பாகங்களை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார், கொலையான பெண் யார்? கொலைக்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முகம் சிதைந்து இருந்ததால் பெண்ணின் கையில் இருந்த டேட்டோ மூலமாக விசாரணை தொடங்கியது. அதில் கொலை செய்யப்பட்டவர், லட்சுமிதேவம்மா என்பது தெரியவந்தது. துமகூரு மாவட்டம் பெல்லாவியை சேர்ந்த லட்சுமிதேவம்மா திருமணமான நிலையில் கடந்த 3ஆம் தேதி தனது சகோதரியின் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. லட்சுமி தேவம்மாவை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணாததால் போலீசில் புகாரளித்து தேடி வந்தனர்.
இந்த நிலையில்தான் அவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் லட்சுமி தேவம்மாவை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது பற்றிய விவரத்திற்காக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரை அவரது லிவ் இன் பார்ட்னர் அஃப்தார் அமீன் பூனாவலாதான் படுகொலை செய்தார். கொலையை மறைக்க ஷ்ரத்தா வாக்கரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் வீசியிருந்தார். இந்த வழக்கு நாட்டையே உலுக்கிப்போட்டது.
இந்நிலையில் தான் ஷ்ரத்தா வாக்கரின் கொலையை போலவே லட்சுமி தேவம்மாவின் கொலையும் இருப்பதாக கர்நாடகா கதிகலங்கி போயுள்ளது. கொலையாளி பிடிபட்டால் மட்டுமே தேவம்மாவின் கொலைக்கான உண்மை காரணம் மற்றும் கொலை பின்னணி குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
August 09, 2025 6:26 PM IST
துண்டு துண்டாக வெட்டி பெண் கொடூரக் கொலை.. 10 இடங்களில் கிடந்த உடல் பாகங்கள்.. கர்நாடகாவை கதிகலங்க வைத்த சம்பவம்!


