ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் ஐந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது, வான் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 மூலம் குறைந்தது ஐந்து பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறினார்.
மேலும், பாகிஸ்தானின் ஜகோபாபாத் விமானப் படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த F16 விமானம் மற்றும் போலாரி விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானமும் அழிக்கப்பட்டதாக ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்தார்.
பஹவல்பூரில் ஹெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம் உள்ளிட்டவை அழிக்கப்பட்டதையும் புகைப்பட ஆதாரத்துடன் விமானப்படை தலைமைத்தளபதி விளக்கினார்.
ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்தினர். இதில், 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் ராஜாங்க ரீதியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதனையடுத்து, இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத நிலையங்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்கள் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்தது. ஆனால், இந்திய ராணுவம், பாகிஸ்தானின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டுவந்தன. பின்னர், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடந்த ஜூலை 28 மற்றும் 29 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது.
இதில், 29ஆம் தேதி காலை காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள தாச்சிகாம் வனப்பகுதியில் இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் மகாதேவில் பஹல்காம் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அன்றைய தினமே பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் மீது பதில் அளித்து பேசினார்.
August 09, 2025 9:13 PM IST
ஆபரேஷன் சிந்தூர்; “பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” – ஏர் மார்ஷல் ஏ.பி. சிங்

