கேரளத்தில் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு நிலவியது.
கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் 64 வயது பெண் ஒருவர், தனது சகோதரருடன் மகாராஷ்டிரத்தின் பன்வேலில் இருந்து திருச்சூர் நோக்கிப் பயணித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில், கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டபோது அந்தப் பெண் கதவின் அருகே நின்றிருக்கிறார்.
அப்போது மர்மநபர் ஒருவர் பெண்ணிடம் இருந்த பையை பறிக்க முயன்றுள்ளார். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்தப் பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். உடனே அந்த மர்ம நபரும் கீழே குதித்து, பெண்ணின் ரூ.8,000க்கும் மேற்பட்ட பணம் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார்.
ரயில் நிலையத்திலிருந்து ரயில் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தால் பெண்ணிற்கு தலையின் பின்புறத்தில் லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த பெண் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், அந்த நபர் திடீரென வந்து தனது பையைப் பறிக்க முயன்றார். நான் விடவில்லை.

