Last Updated:
கபில் சர்மாவின் கனடா உணவகத்தில் 2வது முறையாக துப்பாக்கி சூடு. பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
கனடாவில் பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான கபில் சர்மாவின் உணவகத்தில் 2வது முறையாக கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மா. நடிப்பு மட்டுமின்றி டிவி தொகுப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் கபில் சர்மா. இவர் தனது மனைவியுடன் சேர்ந்து கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே என்னுமிடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக ‘கப்ஸ் கேப்’ என்ற உணவகத்தை திறந்துள்ளார்.
இந்த உணகவம் மீது கடந்த ஜூலை 9 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோடியுள்ளார். விசாரணைக்குப் பின் 9 முறை சுடப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த சம்பவத்துக்கு இந்தியாவால் தேடப்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றிருந்தார். சீக்கிய சமூக மக்களின் பாரம்பரிய உடை குறித்து கபில் சர்மா தனது நிகழ்ச்சி ஒன்றில் கேலி கிண்டல் செயதிருந்ததாகவும், அது தங்கள் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும் பயங்கரவாதக் குழுவான ‘பாபர் கல்சா இன்டர்நேஷனல்’ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட இந்த உணவகம், மீண்டும் கடந்த ஜூலை 20 ஆம் தேதி திறக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து உணவருந்திவிட்டு சென்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து ஒரு மாதமே ஆன நிலையில், நேற்று (வெள்ளிக் கிழமை) மீண்டும் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர்.
இதில் கண்ணாடி, ஜன்னல் உள்ளிட்டவை சேதமடைந்தன. 25 முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் சம்பவத்தின்போது, தங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என்றால், அடுத்த தாக்குதல் மும்பை நகரில் நடத்தப்படும் என்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு கோல்டி தில்லான் என்கிற குர்ப்ரீத் சிங் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோர் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு பதிவிட்டுள்ளனர். உணவக திறப்பு விழாவுக்கு நடிகர் சல்மான் கானை அழைத்ததற்காக இந்த தாக்குதலை அரங்கேற்றியதாக பிஷ்னோய் கும்பல் விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’வின் சீசன் 3 இன் முதல் எபிசோடில் சல்மான் கான் அழைக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து சல்மான் கானுடன் தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த பிஷ்னோய் கும்பல், கபில் சர்மாவை அச்சுறுத்தும் நோக்கில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சல்மான் கானுடன் பணிபுரியும் எவரும் தங்கள் மரணத்திற்கு தாங்களே பொறுப்பாவார்கள் என்றும் அந்த கும்பல் எச்சரித்துள்ளது. “சல்மானுடன் யாராவது பணிபுரிந்தால், அது ஒரு சிறிய நடிகராக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, நாங்கள் யாரையும் விடமாட்டோம். அவர்களைக் கொல்வோம். அவர்களைக் கொல்ல எந்த எல்லைக்கும் செல்வோம்,” என்று பிஷ்னோய் கும்பல் எச்சரித்துள்ளது. இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
August 09, 2025 8:58 PM IST
பிரபல நடிகரின் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. “யாரையும் விடமாட்டோம்” என மிரட்டல்.. என்ன நடந்தது?


