புது தில்லியில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை விடாமல் பெய்த பலத்த மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், சனிக்கிழமையும் கனமழை பெய்யும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், முதல் சிவப்பு எச்சரிக்கையை இன்று காலை 6.20 மணிக்கு வெளியிட்டிருந்தது. தில்லியின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த சிவப்பு எச்சரிக்கையில், ஒட்டுமொத்த தில்லி மற்றும் என்சிஆர், மேஹாம், சோனிபட், ரோஹ்தக், கர்கோடா, பிவானி, சர்கி, தாத்ரி, ஜஜ்ஜார், ஃபரூக் நகர், கோசாலி, மகேந்தர்கர், சோஹானா, ரேவரி, பல்வால், நுஹ், ஔரங்காபாத், பிவாரி உள்ளிட்ட பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை முதல் கனமழை பெய்யும். அப்போது மணிக்கு 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

