பீகார் மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கிவருகின்றன. மக்களைக் கவர்ந்து, வாக்குகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகள் ஒருபுறம் தீவிரமாகப் பணியாற்றிவர, மறுபக்கம் முறைகேடு இல்லாத தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியைச் செய்தது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு தேசிய அளவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்றவர்களை நீக்குவதுமே முக்கிய நோக்கம் என ஆணையம் விளக்கமும் அளித்தது.
ஜூன் மாதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் முன் பீகார் மாநிலத்தில் 7 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரத்து 844 வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்நிலையில், சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு பின்னர் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 லட்சம் பேர் உயிரிழந்தும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருந்ததாகவும், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பமே தரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக, 35 லட்சம் பேர் பீகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை தேர்தல் ஆணையம் ஆரம்பித்தது முதலே எதிர்க்கட்சிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஆர்.ஜெ.டியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தலைப் புறக்கணிக்க திட்டமிடுவதாகவும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கடந்த 1ஆம் தேதி தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், தனது பெயர் இல்லை என ஆர்.ஜெ.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய அவர், “வரைவு வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை. நான் எப்படி தேர்தலில் போட்டியிடுவது” எனத் தெரிவித்த அவர், செய்தியாளர் சந்திப்பிலேயே எல்.இ.டி திரையில் வரைவு வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லாததையும் காட்சிப்படுத்தி காட்டினார்.
தேஜஸ்வி யாதவின் பகிரங்க குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் விளக்கம் கொடுத்தது. தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கத்தில், “வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ், மோசமான செய்தியை தெரிவித்திருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று அவர் கூறும் தகவல் உண்மைக்குப் புறமான தவறான தகவல்” எனத் தெரிவித்தது.
தொடர்ந்து அவர் இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் கேட்டுள்ளது.
இந்தச் சம்பவங்கள் அடுத்தடுத்து பரபரப்பாக பேசப்பட்டுவந்த நிலையில், தற்போது வரைவு வாக்காளர் பட்டியலுக்கு இதுவரை எந்த அரசியல் கட்சியும் அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள விளக்கத்தில், பிகாரில் கடந்த ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு இதுவரை எந்த அரசியல் கட்சியும் அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிகாரில் சிறப்பு வாக்காளர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு தேசிய மற்றும் மாநில கட்சிகள் சார்பில் இதுவரை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
August 06, 2025 8:10 PM IST
பீகார்: வரைவு வாக்காளர் பட்டியலுக்கு எந்தக் கட்சியும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை – தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

