Last Updated:
பீகாரில் ஜாதி மாறி திருமணம் செய்த மகளின் கணவரை தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, மகள் கண் முன்னே கணவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலை விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், சத்தமேயில்லாம் பீகார் மாநிலத்தில் ஒரு சாதி ஆணவப் படுகொலை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தனது எதிர்ப்பை மீறி வேறு சாதி பையனை திருமணம் செய்த கொண்ட மகளுக்கு பாடம் கற்பிக்க மகளின் கணவனை கைத்துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்திருக்கிறார் தந்தை. பீகார் ஆணவப் படுகொலை சம்பவத்தின் பகீர் பின்னணி என்ன?
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிஎஸ்சி நர்ஸ்சிங் 2ஆம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் குமார். அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தவர் தானுபிரியா. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். வீட்டில் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு எழவே, பெற்றோரை எதிர்த்து இருவரும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
மகளின் காதலன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தந்தை பிரேம் ஷங்கருக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பமே இல்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் மகளின் கணவரை தீர்த்துக் கட்டி விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு, மகளும், மருமகனும் படித்து வந்த மருத்துவமனை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு மருமகன் ராகுல் குமாரிடம் சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல் நாடகமாடிய பிரேம் ஷங்கர்.
திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார். இதில் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்து பயந்து போன உடன் படித்த சக மாணவர்கள், கோபத்தில் பிரேம் ஷங்கரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேம் சங்கரை மாணவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராகுலும், தானுவும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர். ஒரே விடுதியில் தனித்தனி மாடியில் தங்கி படித்து வந்துள்ளனர். தானுவின் தந்தை மாறுவேடத்தில் வந்து ராகுலை அணுகியதாகக் கூறப்படுகிறது. பின்னர்தான் தானுவின் தந்தை எனத் தெரியவந்து, ராகுல் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆனால் ராகுல் சுதாரிப்பதற்குள் சுட்டுக் கொன்று விட்டதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர் தன் கண் முன்னாலேயே, தனது கணவர் மார்பில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக, தந்தை எதிராக, மகள் தானு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தனது கணவர் ராகுல் தன் மடியில் தான் இறுதி மூச்சை நிறுத்தினார் என கண்ணீர் மல்க தானு தெரிவித்தார். ராகுல் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தானு நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த கொலை சம்பவம் அரங்கேறியிருப்பதாக தானு குற்றம்சாட்டியுள்ளார். பீகாரில் அரங்கேறிய இந்த ஆணவப் படுகொலை சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
August 06, 2025 10:15 PM IST
சாதி மாறி திருமணம்.. மகளின் கணவரை சுட்டுக்கொன்ற தந்தை.. பீகாரில் பரபரப்பை ஏற்படுத்திய ஆணவக் கொலை!


