விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பேட்டிங் ஜாம்பவான்கள் இல்லாத அணி. அஸ்வின் போன்ற அனுபவ ஸ்பின்னர் இல்லாத அணி..அனுபவமே இல்லாத ஷுப்மன் கில்லை கேப்டனாகவும், விரல் விட்டு எண்ணக் கூடியே ஜடேஜா, ராகுல் மற்றும் பும்ரா போன்ற சீனியர்களை மட்டுமே கொண்ட அணி…இப்படி ஏராளமான சந்தேகக் கணைகளை எதிர்கொண்டபடி ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரை விளையாட இங்கிலாந்து சென்றது இந்திய அணி.
ஆனால் எதிர்பார்த்ததை விட பேட்டிங், பவுலிங் என எல்லா துறைகளில் இளம் வீரர்கள் அசத்தினர். அதே நேரத்தில் அனுபவ வீரர்களான ராகுல், பும்ரா குறிப்பாக ஜடேஜா தேவைப்பட்ட நேரத்தில் களமாடி மேட்ச்சை காப்பாற்றித் தந்தனர்.
முதல் போட்டியிலேயே, ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் போன்ற இளம் நட்சத்திரங்கள் சதம் விளாசி நம்பிக்கை தந்தனர். வெற்றி மிக அருகில் வந்து நழுவியது. 2ஆவது போட்டியில் சீறி எழுந்து போட்டியை வென்றது இந்தியா. மூன்றாவது போட்டி கைநழுவிப் போய் 1-2 என பின்தங்கியது இந்திய அணி. ஆனாலும் மனம் தளராது போராடி, இந்திய அணி வீரர்கள் நான்காவது டெஸ்டை டிரா செய்தனர்.
தொடரையும் டிரா செய்யும் நம்பிக்கையுடன் 5வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் நுழைந்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 2வது இன்னிங்சில் ஜெய்ஸ்வாலின் சதத்தால், இந்திய அணி 396 ரன்கள் எடுத்த நிலையில், 374 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடியது. நான்காவது நாளில் ஹேரி புரூக், ஜோ ரூட் சதம் அடிக்க வெற்றிக்கு மிக அருகில் நகர்ந்தது இங்கிலாந்து.
கடைசி நாளில் வெற்றிக்கு இந்தியாவுக்கு 4 விக்கெட்டுகளும், இங்கிலாந்தக்கு 35 ரன்களும் தேவைப்பட்டன. இங்கிலாந்துக்கு வெற்றி மிக மிக அருகில் இருந்த நிலையில், மனம் தளராமல் இந்திய அணி களம் கண்டது. குறிப்பாக, முகமது சிராஜ் தன் பொறுப்பை உணர்ந்து உயிரைக் கொடுத்து பந்துவீசினார். நிரம்பி வழிந்த ஓவல் மைதானத்தில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி உற்சாகப்படுத்தியது.
357 ரன்களில் 9 விக்கெட்களை இங்கிலாந்து இழந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக கையில் கட்டுடன் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் துணிவுடன் களமிறங்கி போராடினார். எனினும், மறுமுனையில் இருந்த அட்கின்சனை வெளியேற்றி இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்று தொடரை சமன் செய்தது.
5 விக்கெட்களை வீழ்த்திய இந்தியாவின் முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இத்தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகளை கைப்பற்யும் அசத்தினார். இந்திய கேப்டன் கில்லும், இங்கிலாந்தின் ஹேரி புரூக்கும் தொடர் நாயர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
போர் வீரரைப் போன்றவர் சிராஜ் என இங்கிலாந்து மூத்த வீரர் ஜோ ரூட் புகழாரம் சூட்டினார். விராட் கோலியும் சிராஜைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். சச்சின் உள்ளிட்ட ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் இந்திய அணி வீரர்கள் நனைத்து வருகின்றனர். கில் – கம்பீர் காம்போ மேலும் பல வரலாறுகளை படைக்கும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது. டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்கும் பேச்சை இப்போட்டி தகர்த்துள்ளது என்றால் மிகையல்ல.
August 05, 2025 7:52 AM IST

