கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், ஹுலிகட்டித்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சுற்றியுள்ளவர்களின் குழந்தைகள் பயின்றுவருகின்றனர். கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று, அந்தப் பள்ளியில் பயின்றுவரும் 12 மாணவர்கள் உடல் உபாதைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மாணவர்கள் பருகிய நீரில் நஞ்சு பொருள் கலந்துள்ளது. அதுவே மாணவர்களின் உடல்நிலை மோசமானதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும், குடிநீரில் நஞ்சு கலந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அதே பள்ளியில் பயின்றுவரும் ஐந்தாம் வகுப்பு மாணவர் குடிநீர் தொட்டியில் ஏதோ கலந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து போலீஸார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுவன், கிருஷ்ணா மதர் என்று நபர் தன்னிடம் ஒரு பாட்டிலைக் கொடுத்து, அதனை பள்ளி குடிநீர் தொட்டியில் கலக்கச் சொன்னார் எனத் தெரிவித்துள்ளார். சிறுவனின் வாக்குமூலத்தை வைத்து கிருஷ்ணா மதர் எனும் நபரை பிடித்த காவல்துறையினர், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
காவல்துறையிடம் கிருஷ்ணா, ஸ்ரீராம் சேனா அமைப்பின் தாலுக்கா தலைவரான சாகர் பாட்டீல் மற்றும் நாகனகவுடா பாட்டீல் ஆகிய இருவரும் வற்புறுத்தியதால் இந்தக் கொடுஞ்செயலை செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துவந்ததாகவும், அவர்கள் சொல்லும் இந்த வேலையை செய்யவில்லை என்றால் அதனை ஊர்மக்கள் முன்பு அம்பலப்படுத்திவிடுவோம் என அச்சுறுத்தியும் இதனை செய்யவைத்ததாக வாக்குமூலம் கொடுத்தார்.
கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, ஸ்ரீராம் சேனா அமைப்பின் தாலுக்கா தலைவரான சாகர் பாட்டீல் மற்றும் நாகனகவுடா பாட்டீல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்களின் மத வெறுப்பின் காரணமாக பள்ளி குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது அம்பலமானது.
பெலகாவி மாவட்டம், ஹுலிகட்டித்தில் அரசுப் பள்ளியில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சுலேமான் கோரிநாயக் என்பவர் கடந்த 13 வருடமாக தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறார். அவர் மீது கொண்ட மத வெறுப்பின் காரணமாக, அவரை பழிவாங்கும் நோக்கத்துடனும், அவரை பணியிட மாற்றம் செய்வதற்கும், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டியில் நஞ்சு கலந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, ஸ்ரீராம் சேனா தாலுக்கா தலைவர் சாகர் பாட்டீல், நாகனகவுட பாட்டீல் மற்றும் கிருஷ்ணா மதார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தற்போது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும். அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு சான்று” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “பெலகாவி மாவட்டம், சவதாட்டி தாலுகாவில் உள்ள ஹுலிகட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற தீங்கிழைக்கும் நோக்கத்துடன், ஸ்ரீராம் சேனாவின் தாலுகா தலைவர் சாகர் பாட்டீல் மற்றும் இரண்டு பேர் பள்ளி குழந்தைகளின் குடிநீரில் விஷம் கலந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். 15 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில், பல குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, யாரும் உயிரிழக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
August 04, 2025 5:15 PM IST

