Last Updated:
உச்சநீதிமன்றம் ராகுல் காந்தியின் சீனா குறித்த கருத்துகளை கண்டித்து, “உண்மையான இந்தியராக இருந்தால் இப்படி பேசமாட்டீர்கள்” என கண்டனம் தெரிவித்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தியா முழுக்க பாரத் ஜோடோ நடைப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளும் பாஜக அரசை விமர்சித்து வந்தார்.
அந்தவகையில், இந்தியா – சீனா எல்லையில் இருக்கும் அருணாச்சல் பிரதேசத்தில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துவிட்டதாகவும், இந்திய ராணுவ வீரர்கள் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து அவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், இது அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என முறையிட்டார். ஆனால், ராகுல் காந்தியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், தீபங்கர் தத்தா மற்றும் ஏஜி மஷி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சீனா, இந்தியாவின் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டது உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோல் பேசமாட்டீர்கள். நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர், அபிஷேக் சிங்வி, “இவற்றைக் கூட சொல்ல முடியவில்லை என்றால், பிறகு எப்படி அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியும்?” என தனது வாதத்தை முன்வைத்தார்.
அப்போது நீதிபதி தீபங்கர் தத்தா, “இதுபோன்ற விஷயங்கள் நீங்கள் ஏன் நாடாளுமன்றத்தில் சொல்வதில்லை?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, ராகுல் காந்தியின் சிறப்பு விடுப்பு மனு மீது பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ராகுல் காந்தி மீது மூன்று வாரத்திற்கு கீழமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து வழக்கை ஒத்திவைத்தது.
August 04, 2025 2:24 PM IST
“நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இப்படி பேசமாட்டீர்கள்” – எல்லை விவகாரத்தில் ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்


