Last Updated:
வங்கதேச மாடல் சாந்தா பால் கொல்கத்தாவில் போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தாவில் போலி ஆவணங்களை பயன்படுத்தி தங்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த மாடல் அழகி கைது செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் சட்ட விரோதமாக குடியேறியதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கொல்கத்தா போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, சட்ட விரோதமாக தஞ்சமடைந்தவர்களை பிடித்து மீண்டும் வங்கதேசத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், வங்கதேசத்தை சேர்ந்த பிரபல மாடலும், விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் சாந்தா பால் என்பவரும் சிக்கியுள்ளார். இவர், கடந்த 2016 ஆண்டு நடைபெற்ற இந்தோ – பங்களா அழகிப் போட்டியில் மகுடம் சூடியுள்ளார். மாடலிங் உலகில் தடம் பதித்த இவர், 2023 ஆம் ஆண்டுவாக்கில் உரிய பாஸ்போர்ட் உடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். கொல்கத்தாவில் தங்கிய இவர், விமான நிறுனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
அப்போது, தனக்கு திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்வதாக கூறி வாடகை வீடு எடுத்துள்ளார். அதற்காக ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை ஆகியவற்றை கொடுத்துள்ளார். அந்த ஆவணங்களின் படி, அவர் 1998 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி ஆந்திராவை சேர்ந்த முகமது அஷ்ரஃப் என்பவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், போலி ஆவணங்களை தயார் செய்து, அவற்றை பயன்படுத்தி சட்டவிரோதமாக கொல்கத்தாவில் தங்கியிருந்த வங்கதே மாடல் சாந்தா பால்-ஐ போலீசார் கைது செய்தனர். அவரை, வருகின்ற 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதும், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வேறு ஏதும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, சாந்தா பால் தமிழ் மற்றும் வங்க மொழி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, ஒடியா படத்தில் நடக்க ஒப்பந்தமான நிலையில் கைது செய்யப்பட்டு, வங்கதேச மாடலுக்கு எண்ட் கார்டு போடப்பட்டுள்ளது. அவ்வப்போது வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கொல்கத்தாவில் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக கூறி கைது செய்யப்படும் நிலையில், பிரபல மாடல் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kolkata,West Bengal
August 03, 2025 6:31 PM IST


