அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தான் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு பார்வைத் திறன் நன்றாக இருப்பதாக தோனி கூறியிருப்பதால், சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனியின் ஓய்வு முடிவு குறித்து அவ்வப்போது பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தனியார் மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தோனி, இருசக்கர வாகனப் பயணம், ரசிகர்களின் பேராதரவு உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதில், சென்னையுடன் எனக்கு நீண்ட நாள் உறவு இருக்கிறது என்று கூறிய தோனி, 2005 டெஸ்ட் அறிமுகம் மற்றும் 2008 ஐபிஎல் அறிமுகம் எனக்கு சென்னையில் தான் நடந்தது என்றும் தெரிவித்தார். அதேபோல் ஓய்வு என்பது எல்லாத் துறையிலும் உண்டு என்று கூறிய அவர், இளம் தலைமுறைக்கு விட்டுக் கொடுப்பது நல்லது என்றும் சூசகமாக தெரிவித்தார்.
உடல் நலன் சார்ந்து ஏராளமான விஷயங்களைப் பேசினார். நமது வாழ்க்கை முறையே மாறியிருப்பதாகவும், குழந்தைகள் கூட அதிகமாக செல்போன்களையும், மடிக்கணினிகளையும் பயன்படுத்த வேண்டிய தேவை எழுந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கண்களின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும்போது, தனது ஓய்வு குறித்தும் சூசகமாக தெரிவித்தார்.
அதில், நான் இன்னும் 5 வருடங்கள் விளையாடலாம் என எனது கண்களுக்கு மருத்துவர்கள் தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்றும் ஆனால் உடலுக்கு இன்னும் வழங்கவில்லை என்றும் கூறினார். மேலும் பேசிய தோனி, என்னால் வெறுமனே கண்களை மட்டுமே வைத்துக்கொண்டு விளையாட முடியாது எனவும் சிரிப்புடன் பேசினார்.
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து மனம் திறந்து பேசிய தோனி, கடந்த சில ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்கு சிறந்த காலமாக அமையவில்லை என்று வேதனை தெரிவித்தார். சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததாகக் கூறிய தோனி, உண்மையில் ரசிகர்களை விட வீரர்களுக்கே அதிக ஏமாற்றம் என்றும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை என்று கவலை தெரிவித்தார்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் கவலையளிப்பதாகவும், ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்பினால் பேட்டிங் ஆர்டர் மேம்படும் என்றும் தெரிவித்தார். வரும் டிசம்பர் மாதம் சிறிய அளவிலான ஏலம் நடைபெற உள்ளதாகவும், அதனை பயன்படுத்தி அணியில் இருக்கும் குறைகளை சரி செய்வோம் என்றும் கூறினார். தோனி மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியில் விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில், அணியை மறுகட்டமைக்க வேண்டியது அவசியம் என தோனி பேசியது கவனிக்கத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
August 03, 2025 1:47 PM IST

