புது தில்லி: ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சா்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், ‘எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது மத்திய அரசு, ராணுவம் தரப்பில் தில்லியில் தொடா் செய்தியாளா்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி, கடற்படை கமாண்டா் ரகு நாயா், விமானப் படையின் விங் கமாண்டா் வியோமிகா சிங், ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து ராணுவ நடவடிக்கைகளை விவரித்தனா். இதில் இரு பெண் அதிகாரிகள் பங்கேற்றதை பலரும் பாராட்டினா்.
இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது. முக்கியமாக ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று மதத்தைக் குறிப்பிட்டு விஜய் ஷா கூறியதற்கு கடும் எதிா்ப்பு எழுந்தது.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த மத்திய பிரதேச உயா் நீதிமன்றம், அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில், அவா் மீது இந்தூா் மாவட்டத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து விஜய் ஷா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விஜய் ஷா மீதான கைது நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த 3 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து கடந்த மே 19-ஆம் தேதி உத்தரவிட்டது.

