இதனையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து சிறப்பு நாடாளுமன்றம் கூடி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. பின்னர் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 21ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்கிய 21ஆம் தேதி முதல் தொடர்ந்து அவையில் பிகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், நீதிபதி யஷ்வந்த் வர்மா உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.
இன்று மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனையடுத்து இன்று பிற்பகல் அமர்வில், ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் துவங்கி வைத்தார்.
அவையில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா – பாகிஸ்தான் மோதலை தாங்களே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறிவரும் நிலையில், நோக்கம் நிறைவேறியதால்தான் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நிறுத்தியதாக விளக்கினார். மேலும், புற அழுத்தம் எதுவும் வரவில்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது, ”ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எந்த நிலையிலும், அமெரிக்காவுடனான எந்தவொரு உரையாடலிலும், வர்த்தகம் மற்றும் என்ன நடக்கிறது என எதுவும் பேசவில்லை.
எங்கள் ராஜதந்திரத்திற்கான கவனம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகும். இந்த குறிப்பிட்ட கட்டத்தில், பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ளது. நாம் இல்லை என்பது நமக்கு சவாலாக இருந்தது. ஏப்ரல் 25 ஆம் தேதி பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையைப் பார்த்தால், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பயங்கரவாதத் தாக்குதலை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளனர் என்பதை நான் மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.
பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மிக முக்கியமாக, இந்த கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயலின் குற்றவாளிகள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பொறுப்புக்கூற வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை கவுன்சில் அடிக்கோடிட்டுக் காட்டியது.
ஏப்ரல் 25 முதல் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும் வரை, ஏராளமான தொலைபேசி அழைப்புகள் மற்றும் உரையாடல்கள் நடந்தன. எனது மட்டத்தில், 27 அழைப்புகள் வந்தன; பிரதமர் மோடியின் மட்டத்தில், கிட்டத்தட்ட 20 அழைப்புகள் வந்தன. சுமார் 35-40 ஆதரவு கடிதங்கள் வந்தன. ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உள்ளன. பாகிஸ்தானைத் தவிர 3 நாடுகள் மட்டுமே ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்தன” எனத் தெரிவித்தார்.
July 28, 2025 9:14 PM IST
“பிரதமர் மோடிக்கும் அதிபர் டிரம்பிற்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை” – அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்

