Last Updated:
காஷ்மீரில் தாச்சிகாம் வனப்பகுதியில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள தாச்சிகாம் வனப்பகுதியின் மேல் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஒரு மாதமாக உளவுத்துறையினர் காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் குறித்து ரகசியமாக தகவல் சேகரித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் தாச்சிகாம் வனப்பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் காவல்துறையினர் மேற்கொண்ட பெரிய அளவிலான கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த என்கவுன்ட்டர் நடந்தது. இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் மஹாதேவ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய வெளிநாட்டினர் என்பதை உயர் புலனாய்வு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூவர் இந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து தாச்சிகாம் வனப்பகுதியில் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளும், ஆயுதங்களை மீட்கும் நடவடிக்கையும் நடந்து வருகின்றன.
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம், பாகிஸ்தானில் இருந்த ஒன்பது பயங்கரவாத நிலைகளை துல்லியமாகக் குறிவைத்து தாக்கி அழித்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, பிற்பகல் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்தான விவாதத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவங்கி வைத்து, தற்போது விவாதம் நடந்து வருகிறது.
Jammu and Kashmir
July 28, 2025 2:44 PM IST


