Last Updated:
20/4/10 Rule: இந்த விதியைப் பின்பற்றினால், அதிகளவு பணத்தைச் செலவு செய்யாமலும் மற்றும் கடன் வலைக்குள் மாட்டிக்கொள்ளாமல், அதே சமயத்தில் ஒரு காரை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
ட்ரீம் காரை வாங்க வேண்டும், அதே சமயத்தில் பொருளாதாரத்தை எப்படி நிர்வகிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? அப்படி என்றால், இந்த பதிவு உங்களுக்கானது. ஒரு கார் வாங்குவது என்பது பல நபர்கள் எடுக்கக்கூடிய முக்கியமான பொருளாதார முடிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. முதல் காரை வாங்குவதற்கு கணிசமான தொகை கட்டாயமாகத் தேவை. ஒரு புதிய வாகனத்திற்கு உரிமை கொண்டாடும் போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியே தனி தான். ஆனால் அதனால் ஏற்படும் பொருளாதார அழுத்தம் உங்களுடைய மகிழ்ச்சியைக் குலைத்து விடக்கூடாது. எனவே ஒரு கார் வாங்குவதற்கு முன்பு, அதற்கான பட்ஜெட்டை அமைப்பது மிகவும் அவசியம். இதில் இன்சூரன்ஸ் மற்றும் பிற தொடர்புடைய செலவுகள் போன்றவை அடங்கும்.
சொந்தமாக ஒரு காரை வாங்குவதற்கு பொருளாதார ஆலோசகர்கள் 20/4/10 விதியைப் பரிந்துரை செய்கின்றனர். இந்த எளிமையான விதி என்பது பொருளாதார வழிகாட்டுதலாக அமைகிறது. அதாவது 20% டவுன் பேமெண்ட், 4 வருட கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் மற்றும் உங்களுடைய மாத வருமானத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாக காருக்குத் தேவையான பிற செலவுகள் இருக்க வேண்டும். இந்த விதியைப் பின்பற்றினால், அதிகளவு பணத்தைச் செலவு செய்யாமலும் மற்றும் கடன் வலைக்குள் மாட்டிக்கொள்ளாமல், அதே சமயத்தில் ஒரு காரை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
இப்போது இந்த விதியை விளக்கமாகப் பார்க்கலாம்…
எப்பொழுதும் ஒரு காரை வாங்குவதற்கான செலவில் 20 சதவீதத்தை முதலிலேயே நீங்கள் செலுத்தி விட முயற்சி செய்ய வேண்டும். இதன் மூலமாக உங்களுடைய மொத்த கடன் தொகையானது குறையும். மேலும் மாதத் தவணையும் குறைந்து, குறைவான வட்டியைச் செலுத்துவீர்கள்.
கார் வாங்குவதற்கான கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 4 வருடங்களாக வைத்துக் கொள்ளுங்கள். குறைவான கால அளவைத் தேர்வு செய்யும்போது உங்களுடைய வட்டி விகிதமும் குறையும். நீண்ட கால அவகாசம் உங்களுடைய EMI தொகையைக் குறைத்தாலும் அது கடனுக்கான மொத்த செலவை அதிகரித்து விடும்.
உங்களுடைய கார் தொடர்பான மொத்த மாத செலவுகள் என்பது உங்களது வருமானத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. எனவே பட்ஜெட்டை அமைக்கும் போது EMI, இன்சூரன்ஸ் ப்ரீமியம், எரிபொருள் மற்றும் பராமரிப்பு கட்டணங்கள் போன்ற அனைத்து செலவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
20/4/10 கார் விதியின் பயன்கள்
- குறைந்தபட்சம் 20% அல்லது அதற்கும் அதிகமான டவுன் பேமெண்ட் ஏற்பாடு செய்து கொள்வது உங்களுடைய ஒட்டுமொத்த கடன் சுமையைக் குறைக்கும். இதனால் எதிர்பார்த்தபடி உங்களுடைய மாத தவணை குறைந்து, கடனை சௌகரியமான முறையில் செலுத்தி முடிப்பீர்கள்.
- பட்ஜெட் ஏற்கனவே இறுக்கிப் பிடிக்கும்போது ஒரு கார் வாங்குவது உங்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனால் சரியான பொருளாதார திட்டமிடல் மூலமாக எதிர்காலத்தில் கடன் வலைக்குள் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.
- பட்ஜெட்டை அமைப்பது உங்களுடைய கார் தொடர்பான செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு உதவும்.
- ஒரு பொருளாதார திட்டத்தின் மூலமாக உங்களுடைய சேமிப்புகள் மற்றும் பிற செலவுகளை எந்த ஒரு சமரசமும் செய்யாமல் கார் லோனை எளிமையாக திருப்பிச் செலுத்தலாம்.
- 20/4/10 விதியின் மூலமாக நீங்கள் காரை வாங்குவதற்கும், அதனைப் பராமரிப்பதற்கும் அளவுக்கு அதிகமான தொகை செலவு செய்ய மாட்டீர்கள்.
- எனினும் உங்களுடைய பொருளாதார நிலை, மாத செலவுகள் மற்றும் வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு புதிய காரை வாங்குவதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும்.
July 28, 2025 1:04 PM IST


