இந்த தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
இந்தப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி அதிரடியாக பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 150 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்தார். மேலும் ஜேக் கிராலி, பென் டக்கட், போப் ஆகியோர் அணிக்கு உறுதுணையாக இருக்க, இங்கிலாந்து அணி 669 ரன்களை குவித்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி. ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் ஆகியோர் 0 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மூத்த வீரரான கே.எல்.ராகுலும், அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லும் கைகோர்த்தனர். ஷுப்மன் கில் சதமடிக்க, கே.எல்.ராகுல் 90 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இவர்கள் வெளியேறியதையடுத்து ரவீந்திர ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தனர்.
இவர்களின் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சேர்ந்து, இந்திய அணி ‘லீட்’ ரன் எடுக்க காரணமாக அமைந்தனர். இருவரும் சதத்தை நெருங்கிக்கொண்டிருக்க, போட்டி முடிய 15 ஓவர்கள் மீதம் இருந்தது. அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்திருந்தது.
ஜடேஜா 89 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எப்படியும் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் தான் முடிவடையப்போகிறது என்பதை உணர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இதோடு டிரா செய்துவிடலாம் எனக்கூறி, ஜடேஜாவுடன் கைகுலுக்க வந்தார். ஆனால் இந்திய அணி டிரா செய்ய மறுத்துவிட்டது.
இந்த செயல் பேசுபொருளான நிலையில், இதுகுறித்தான வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பென் ஸ்டோக்ஸ் “நீங்கள் சதமடிக்க வேண்டுமானால் அதை முன்னரே செய்திருக்க வேண்டும். இப்போது நீங்கள் ஹேரி புரூக், பென் டக்கட்க்கு எதிராக சதமடிக்க வேண்டுமா” என கேட்டார்.
இதற்கு ஜடேஜா, “இப்போது என்ன நாங்கள் டிரா செய்துவிட்டு வெளியேற வேண்டுமா? என்னால் எதுவும் செய்ய முடியாது” என தெரிவித்தார். இதையடுத்து ஜேக் கிராலியும், ஹேரி புரூக்கும் “நீங்கள் டிரா செய்துவிட்டு கிளம்புங்கள்” என தெரிவித்தனர். இந்திய அணி வீரர்கள் சதமடிக்கவிருந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் அதை தடுக்க போட்டியின் நடுவே இப்படி நடந்துகொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இறுதியில் ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதமடித்து போட்டியை டிரா செய்தனர்.
July 28, 2025 8:00 AM IST

