Last Updated:
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 214 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், அதை தொடர்ந்து டி20 போட்டிகள் தொடங்கின. முதல் 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில் மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. இதை அடுத்து தொடக்க வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராண்டன் கிங் மற்றும் கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆஸ்திரேலியா பவுலிங்வை வெளுத்தெடுத்ததால் ரன் ஸ்கோர் எகிற தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பிராண்டன் கிங் 62 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த ஹெட்மயர் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். ரூதர்போர்டு 12 ரன்களும், ரோமன் பவல் 9 ரன்களும் எடுத்தனர். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் கேப்டன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 57 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 214 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் மிச்சல் மார்ஷ் 22 ரன்களும், மேக்ஸ்வெல் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலீஷ் 15 ரன்களும், கேமரூன் கிரீன் 11 ரன்களும் எடுத்தனர். 8.5 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இணைந்த டிம் டேவிட் மற்றும் மிட்செல் ஓவன் இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. குறிப்பாக டிம் டேவிட் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசினார். 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 சிக்ஸர், 6 பவுண்டரி, 102 ரன்கள் குவித்தார்.
July 26, 2025 4:06 PM IST


