Last Updated:
மிகவும் சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசையையொட்டி சேலம் உழவர் சந்தைகளில் ஒட்டுமொத்தமாக ஒருகோடியே 39 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 13 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைச்சல் அடைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
பெரும்பாலும் அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் உழவர் சந்தையில் விற்பனை அதிகமாக நடைபெறும் அந்த வகையில், நேற்று ஆடி அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்குவோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. விவசாயிகளும் அதிகளவு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஆண்டில் மூன்று முக்கிய அமாவாசைகள் உள்ளது. அதில் ஒன்று ஆடி அமாவாசை. இதன் காரணமாக ஏராளமான கோயில்களிலும், வீடுகளிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது இதனால் காய்கறிகள் மற்றும் பழங்களின் தேவை அதிகமாக இருந்தது. எனவே, மக்கள் அதிகமாக வாங்கிச் சென்றனர்.
குறிப்பாக, சந்தைகளில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்றவைகள் அதிக அளவில் விற்பனையானது. சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட 13 உழவர் சந்தைகளில் 1.114 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 250.18 மெட்ரிக் டன் காய்கறிகள், 78.69 மெட்ரிக் டன் பழங்கள் என மொத்தம் 328.87மெட்ரிக் டன் பொருட்களை ரூபாய் 1.39 கோடிக்கு நுகர்வோர்கள் வாங்கிச் சென்றதாக வேளாண் மற்றும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ரூ.25.14 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனையானது. இதேபோல், சேலம் பால் மார்க்கெட், ஆற்றோர மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை அமோகமாக இருந்தது.
Salem,Salem,Tamil Nadu
July 25, 2025 5:50 PM IST


