கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலில், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, சிறைச் சாலையிலிருந்து தப்பிய நிலையில், ஒரு மணி நரேத்தில் பிடிபட்டார்.
கன்னூர் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய குற்றவாளி, கன்னூர் மாவட்டம் தலப்பு பகுதியில் இருந்த காலி மனையில் இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலம் கன்னூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி என்கிற சார்லே தாமஸ், வெள்ளிக்கிழமை அதிகாலை, தன்னுடைய அறையிலிருந்து காணாமல் போனார். தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த 49 வயது கோவிந்தசாமி, கேரளத்தின் மிக பயங்கரக் குற்றவாளிகளில் ஒருவராக உள்ளார்.
2011ஆம் ஆண்டு, 23 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று சிறையில் தண்டனையை அனுபவித்து வந்த நிலையில், காணாமல் போனதும், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளியை தேடினர்.
அவருடன் உள்ளூர் மக்களும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், காலி மனை ஒன்றில், இருந்த கிணற்றுக்குள் இறங்கி பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, சிறைச்சாலையிலிருந்து எவ்வாறு கோவிந்தசாமி தப்பிச் சென்றார் என்பது பற்றி விசாரணை நடத்த, உயர் நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிந்தசாமி ஒரு மாற்றுத்திறனாளி என்பதும், அவர் கைத்தடி வைத்தே நடப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலும், அவர் கடுமையான பாதுகாப்பு அரண்களைத் தாண்டி, சிறையிலிருந்து தப்பிச் சென்றிருப்பது, சிறைத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவிந்தசாமி சிறையிலிருந்து தப்பிச் சென்றிருப்பதால், சிறைத் துறையில் இருந்த கண்காணிப்புக் குறைபாடுகள் மற்றும் சிறைத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறைத் துறை அறிக்கை அளிக்கவும் மாநில உள்துறை உத்தரவிட்டுள்ளது.

