Last Updated:
பிரபல WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் 71வது வயதில் காலமானார்.
பிரபல அமெரிக்க மல்யுத்த ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மாரடைப்பால் காலமானார். உலகம் முழுவதும் WWE பிரபலமாக மிக முக்கிய காரணமாக இந்த ஹல்க்கின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான பெயர் ஹல்க் ஹோகன். கையை சுழற்றியபடி காதருகே கொண்டு செல்லும் மேனரிஸம், பனியனை கிழித்துவிட்டு கத்துவது, HORSE SHOE மீசை என மாமிச மலை ஹல்க் ஹோகனை அறியாத WWE ரசிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
WWE நிறுவனம் இன்று மாபெரும் சாம்ராஜ்யமாக பரந்து விரிந்திருக்க ஹோகனும் முக்கிய காரணம். 1953 ஆகஸ்ட் 11இல் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் பிறந்தார் ஹல்க் ஹோகன். 1977இல் அவரது மல்யுத்த வாழ்க்கை தொடங்கினாலும், 1983இல் WWE எனப்படும் உலக மல்யுத்த கூட்டமைப்பில் இணைந்தார். அமெரிக்காவில் மட்டும் பிரபலமாக இருந்த WWE மல்யுத்தத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்ததில் ஹல்க் ஹோகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. வளையத்தில் ஹல்க்கின் நாடகத்தன்மை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்க்கும் காந்தமாக இருந்தது.
7 அடி உயர ஆஜானுபாகு ஆண்ட்ரே தி ஜெயன்ட்டுக்கு எதிரான அவரது 1988 ஆம் ஆண்டு போட்டி, அமெரிக்க தொலைக்காட்சி வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட மல்யுத்த ஒளிபரப்புக்கான சாதனையை இன்னும் தக்கவைத்துள்ளது. மல்யுத்ததில் புகழ்பெற்ற நிலையில் இருந்தபோது, நடிப்பில் கவனம் செலுத்துவதற்காக 1993 ஆம் ஆண்டு WWF-ஐ விட்டு விலகிய அவர், ஓராண்டுக்கு பின் மீண்டும் மல்யுத்தத்துக்கு திரும்பினார். ஆனால் இம்முறை WWF பக்கம் செல்லாமல் WCW எனப்படும் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில் சேர்ந்தார். அங்கு, அவர் ஆறு உலக பட்டங்களை வென்றார். இதன்பின்னர், 2002இல் மீண்டும் WWEக்குத் திரும்பிய ஹோகன் எட்டாவது ரெஸில்மேனியாவில் “தி ராக்குக்கு” எதிரான போட்டியில் செம டஃப் கொடுத்து வியக்க வைத்தார்.
2003இல் தனது 35 வருட குத்துச்சண்டை கரியருக்கு முழுக்கு போட்டார். 2005 ஆம் ஆண்டு WWE ஹால் ஆஃப் ஃபேமில் ஹல்க் சேர்க்கப்பட்டார். இனவெறி கருத்துக்கள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு அவர் நீக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டில் WWE ஹால் ஆஃப் ஃபேமில் ஹல்க் இரண்டாவது முறையாக சேர்க்கப்பட்டார். ராக்கி III உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2024ல் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தோன்றி, டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரமும் மேற்கொண்டார்.
இந்த நிலையில், ஹல்க் ஹோகன் புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு தனது 71வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு அமெரிக்கப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை இன்னும் சாம்பியன் போலவே நடத்துகிறார்கள்” என்று ரசிகர்களின் அன்பை ஹல்க் ஒருமுறை தெரிவித்திருந்தார். ஆம் அவர் என்றென்றும் மக்கள் மனதில் சாம்பியன்தான்.
July 25, 2025 7:24 AM IST


