Last Updated:
தர்மஸ்தலா கோயில் அருகே 100 பெண்கள் கொலை வழக்கை விசாரிக்க, டிஜிபி பிரணவ் மொஹந்தி தலைமையில் 20 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், தர்மஸ்தலா கோயில் அருகே சுமார் 100 பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில், மேலும் 20 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், தக்ஷிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாத சாமி கோயிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த 4 ஆம் தேதி அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை முன்வைத்தார். அதில், கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அவர்களின் உடல்களை ரகசியமாக புதைக்குமாறு தன்னை கோயில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்படி, நேத்ராவதி ஆற்றின் அருகே தோண்டிய போது, சில சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சைபர் பிரிவு டிஜிபி பிரணவ் மொஹந்தி தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவை அம்மாநில அரசு அமைத்தது. அதில், டிஐஜி அனுசேத், துணை ஆணையர்கள் சவுமியா லதா, ஜிதேந்திர குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இக்குழுவில் மேலும் 20 காவல்துறை அதிகாரிகளை நியமித்து டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
July 24, 2025 9:02 PM IST


