Last Updated:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர், விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகை என்றால் நம் நினைவுக்கு வருவது பட்டாசு தான். தீபாவளி அன்று குழந்தைகளுடன் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம். தீபாவளி பண்டிகை நாட்களில் பட்டாசு விற்பனை ஜோராக நடைபெறும். எனவே, வருகிற அக்.20 அன்று தீபாவளி பண்டிகை வருகிற நிலையில், சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற, ஜூலை 16 முதல் 31 வரை கமிஷனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துடன், நீதிமன்ற வில்லை ஒட்டப்பட்ட விண்ணப்பம், உரிமைக்கட்டணம் ரூ.1,000 செலுத்தியதற்கான இ-சலான், பட்டாசு இருப்பு வைத்து விற்கப்பட உள்ள இடத்தில் 5 அசல் வரைபடம், சொந்த கட்டடமாக இருப்பின் சொத்துவரி ரசீது, வாடகை கட்டடமாக இருப்பின், கட்டட உரிமையாளரின் சம்மத கடிதம், மாநகராட்சி உரிமம் கட்டணம் செலுத்திய ரசீது, விண்ணப்பதாரரின் 3 புகைப்படம் உள்ளிட்டவை இணைக்க வேண்டும். தற்காலிக பட்டாசுகடை வைக்கப்படும் இடம் தீப்பிடிக்காத கான்கிரீட் கட்டடமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 9 சதுர மீட்டருக்கு பரப்பு இருக்க வேண்டும். ஒரு பட்டாசு கடைக்கும், மற்றொரு பட்டாசு கடைக்கும் 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், திருமண மண்டபம், வணிக வளாகங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கோரும் விண்ணப்பங்களை 31.07.2025-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் இ-சேவை மையத்தின் மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 31.07.2025 -ந் தேதிக்கு பின்னர் விண்ணப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Salem,Salem,Tamil Nadu
July 23, 2025 6:11 PM IST


