கேரளாவில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தனது ஓராண்டு வருமானம் வெறும் 680 ரூபாய்தான் என கணக்கு காட்டியதால் சிக்கலில் சிக்கியிருக்கிறார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிடுகிறார் பாஜக எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ராஜீவ் சந்திரசேகர், தனது வேட்புமனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக கூறி காங்கிரஸ் புகார் எழுப்பியது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள சொத்து விவரங்களை சரிபார்க்கும்படி, மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும், தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொந்து விவரங்களுக்கும் பலமடங்கு மாற்றங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி புகார் கூறியுள்ளது.
குறிப்பாக ராஜீவ் சந்திரசேகரின் அசையும் சொத்துகளின் மதிப்பு 2018ஆம் ஆண்டில் சுமார் 28 கோடியாக இருந்த நிலையில் தற்போது வெறும் 9 கோடியே 25 லட்சம் ரூபாயாக குறைந்துள்ளது. அதேபோல் 2018ஆம் ஆண்டு கடன்கள் எதுவும் இல்லை என குறிப்பிட்டிருந்த ராஜீவ் சந்திரசேகர், தற்போது 19 கோடியே 41 லட்சம் ரூபாய் கடன்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். வங்கி முதலீடுகள் 100% உயர்ந்துள்ள நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் 200% வரை அதிகரித்திருப்பதும் ராஜீவ் சந்திரசேகரின் வேட்புமனு விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இது ஒருபுறம் என்றால், ஒவ்வொரு நிதியாண்டும் காட்டப்படும் வருமானக் கணக்கில் அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு தகவலை ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அதாவது 2021-2022ஆம் நிதியாண்டில், அவரது வரிவிதிப்புக்குட்பட்ட வருமானம் வெறும் 680 ரூபாய் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுபவரும், கோடீஸ்வரருமான மத்திய இணையமைச்சர், ஆண்டுக்கு 680 ரூபாய் மட்டுமே வரி செலுத்த வேண்டிய வருமானம் இருப்பதாக குறிப்பிட்டதும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
