கோலாலம்பூர்,
சுகாதார அமைச்சின் (MOH) அனுமதியின்றி சமூக ஊடகங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த பல்வேறு வகை அழகு மற்றும் உணவு பொருட்கள் சிகாம்புட் பகுதியில் இரு இடங்களில் நடந்த சுற்றிவளைப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதல் இடத்தில் 1,972 பெட்டிகள் மற்றும் 2,551 பாட்டில்கள் உள்ளடங்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே இடத்தில் 28 முதல் 30 வயதுக்குள் உள்ள ஒரு ஆண் மற்றும் இரு வெளிநாட்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர் என புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.
கைதுசெய்யப்படடவரில் 40 வயது உரிமையாளர் ஒருவர் மற்றொரு வீட்டு முகவரிக்கு போலீசாரை அழைத்துச் சென்றார். அங்கு கூடுதல் 180 பெட்டிகள் மற்றும் 895 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்த பறிமுதல் மதிப்பு RM185,515 ஆகும்.
இந்த சோதனை நடவடிக்கையில் MOH மற்றும் DBKL அதிகாரிகளும் ஈடுபட்டனர். சம்பவம் 1984 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 18A மற்றும் 7(1)(a) பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி முதல் ஜூலை 16 வரை 167 ரெய்டுகள் நடத்தப்பட்டுள்ளன; இதில் 300 பேர் கைது செய்யப்பட்டு, மொத்த பறிமுதல் மதிப்பு RM541.03 மில்லியனாக பதிவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.




