Last Updated:
காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடத்திய வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் என்று கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வென்றது. இதனை கொண்டாடும் விதமாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெற்றி பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஜூன் 4-ஆம் தேதி இந்தப் பேரணி நடத்தப்பட்டபோது சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.
மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்குள் வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் வெளியே கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு நெரிசல் உண்டானது.
இந்த சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய இந்த ஆர்.சி.பி. அணியின் வெற்றி இறுதியில் சோகத்திலும் அதிர்ச்சியிலும் முடிந்தது. இதன் பின்னர் சம்பந்தப்பட்ட உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டன.
இது தொடர்பாக விசாரணை நடத்தி தற்போது கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
11 பேர் உயிரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம். காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
வெற்றி கொண்டாட்டம் நடத்துவதாக காவல்துறைக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ஜூன் நான்காம் தேதி காலை 8:55 மணிக்கு வெற்றியை பெங்களூரு மக்களுடன் கொண்டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டு இருந்தார்.
வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு மூன்று லட்சம் பேர் குவிந்தனர். மேலும் அன்றைய தினம் மாலை 3:14 மணிக்கு போடப்பட்ட பதிவில் மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும் பதாக குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு போடப்பட்ட எந்த பதிவிலும் இது குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர்.சி.பி. நிர்வாகமே காரணம் என்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
July 17, 2025 12:34 PM IST
‘கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம்’ – கர்நாடக அரசு அறிக்கை வெளியீடு


