Last Updated:
பிரதமர் மோடியின் தலைமையில்லாமல் பாஜகவால் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது என்று எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார். 75 வயது ஓய்வு விதி மோடிக்கு பொருந்தாது.
பிரதமர் மோடியின் தலைமை இல்லாவிட்டால், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், பாஜகவால் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது என்று அக்கட்சியின் எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார்.
அண்மையில் புனேவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “உங்களுக்கு 75 வயதானது என்றால், நீங்கள் மற்றவர்களுக்கு வழி விட வேண்டிய நேரம் என்று அர்த்தம்…” என தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு வரும் செப்டம்பர் மாதம் 75 வயதாகும் நிலையில், மோகன் பகவத்தின் இந்தக் கருத்து தற்போது பேசுபொருளானது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் 75 வயதான பிறகு ஓய்வு பெற்ற நிலையில், அந்த விதி பிரதமர் மோடிக்கும் பொருந்துமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதனிடையே தான் ஜார்க்கண்ட் மாநிலம் கோடா (Godda) மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே, செய்தி முகமை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், மோடிக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போட்டியாளராக இருப்பாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மோடியே பிரதமராக நீடிப்பார் என்று நிஷிகாந்த் துபே பதிலளித்தார்.
பிரதமர் மோடியின் தலைமை இல்லாவிட்டால், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், பாஜகவால் 150 இடங்களில் கூட வெல்ல முடியாது என்று கூறினார். பிரதமர் மோடியின் முகத்தையே பாஜக முன்னிலைப்படுத்தியதாக கூறிய அவர், தேர்தல் பொதுக்கூட்டங்களில் மக்கள் வாக்கு மோடிக்கு செல்லும் என்று கூறிதான் பரப்புரை செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். எனவே, 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற விதிமுறை மோடிக்கு பொருந்தாது என்றும் நிஷிகாந்த் துபே தெரிவித்தார்.
Delhi,Delhi,Delhi
July 19, 2025 8:46 AM IST

