ரஷியா தவிர பிற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி – மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரி
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது; ரஷியா தவிர பிற நாடுகளில் இருந்தும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொள்ள முடியும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை ஹைட்ரோகாா்பன் இயக்குநரகம் சாா்பில் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சா் புரி பங்கேற்று இது தொடா்பாக பேசியதாவது:
கயானா போன்ற புதிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் சந்தைக்கு வந்துள்ளன. பிரேஸில், கனடா ஆகியவை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளன. எனவே, நமக்கு எந்த நெருக்கடியும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்தியா மாற்று வழிகளில் இருந்து கச்சா எண்ணெயைப் பெற முடியும்.
மேலும், இந்தியாவிலும் புதிய எண்ணெய் படுகைகளைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்மூலமும் எண்ணெய் இறக்குமதியை நாம் சற்று குறைக்க முடியும். கச்சா எண்ணெய் விஷயத்தில் எந்த பிரச்னை எழுந்தாலும், நம்மால் அதைச் சமாளிக்க முடியும். கச்சா எண்ணெயை 27 நாடுகளில் இருந்து இதுவரை நாம் வாங்கியுள்ளோம். ஆனால், 40 நாடுகள் இப்போது கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன.
2022-க்கு முன்பு நாம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவு நமது மொத்த கொள்முதலில் 0.2 சதவீதம் அளவே இருந்தது. கடந்த சில ஆண்டுகளில்தான் அதிக அளவில் கொள்முதல் செய்து வருகிறோம் என்றாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய புரி, ‘கச்சா எண்ணெய் இப்போது தொடா்ந்து கிடைத்து வருகிறது. எனவே, சா்வதேச அளவில் பதற்றம் அதிகரிக்கும்போது கச்சா எண்ணெய் சந்தை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. முக்கியமாக விலை வேகமாக அதிகரிப்பதில்லை. இப்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 68.5 அமெரிக்க டாலராக உள்ளது. இதுவே அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும். எரிபொருளில் எத்தனால் கலப்பை இப்போதுள்ள 20 சதவீதத்தில் இருந்து மேலும் அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது’ என்றாா்.

