Last Updated:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது
சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஐபிஎல் தொடரில் பிரபலமாக இருக்கும் வீரர் ஒருவர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
பல்வேறு உலக நாடுகள் தங்களுக்கான கிரிக்கெட் அணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. இருப்பினும் பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் மட்டுமே கிரிக்கெட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அத்தகைய சூழலில் இந்தியாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பாக 20 ஓவர் பிரிமியர் லீக் போட்டிகள் ஐபிஎல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டன. இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நூற்றுக்கணக்கான வெளிநாட்டு வீரர்கள் விளையாடி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார்கள்.
இதேபோன்று இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கும் இந்த ஐபிஎல் தொடரில் நல்ல வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த ஆண்ட்ரே ரசல் கொல்கத்தா அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த அணி கோப்பைகள் வென்றதில் ரசலின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இதனால் தான் கடந்த சில சீசன்களில் அவர் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரை கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற உள்ளதாக ரசல் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஞாயிறு அன்று முதல் தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கும் வகையில் ரசல் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
July 17, 2025 4:34 PM IST


