Last Updated:
கர்நாடகா தர்மஸ்தலா கோயில் அருகே 100 பெண்கள் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலா கோயில் அருகே சுமார் 100 பெண்கள் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான புகார்களும் குவியத் தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாத சாமி கோயிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை முன்வைத்தார். அதில், கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களின் உடல்களை ரகசியமாக புதைக்குமாறு தன்னை கோயில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோயில் முன்னாள் ஊழியரை பெல்தங்காடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, புகார்தாரர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில், நேத்ராவதி ஆற்றின் அருகே தோண்டியபோது, சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட கன்னட யூடியூபர் சமீர் என்பவர் மீது தவறான தகவல்களை பரப்பியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்விவகாரத்தை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மகளிர் ஆணையம் சார்பில் அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு தர்மஸ்தலா கோயிலுக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று அவரது தாய் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், மருத்துவம் படித்து வந்த தனது மகள் தர்மஸ்தலா கோயிலுக்கு சென்ற பிறகு காணவில்லை என்றும், அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் வழக்கு பதிவு செய்யாமல் தன்னை மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோயில் ஊழியர்கள் தன்னை தாக்கியதில் தான் 3 மாதங்கள் கோமா நிலைக்கு சென்றதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தனது மகளின் சடலத்தையாவது கண்டெடுத்து கொடுக்குமாறும் அப்பெண் கூறியுள்ளார். இவ்விவகாரம், அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தர்மஸ்தலா கோயில் அருகே சுமார் 100 பெண்கள் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான புகார்களும் குவியத் தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
July 16, 2025 3:28 PM IST
100 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. கோயில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குவியும் புகாரால் மீண்டும் பரபரப்பு!


