வரதட்சிணை கொடுமை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளத்துப் பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளம் மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்பவர், 2020-ல் திருமணமாகி கணவர் நிதிஷுடன் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு குடிபெயர்ந்தார்.
இந்த நிலையில், ஜூலை 8 ஆம் தேதியில் ஷார்ஜாவில் வசித்து வந்த விபன்சிகாவும் அவரது மகளும் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் பணிப்பெண் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் வரதட்சிணையின் காரணமாகவே விபன்சிகா தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
விபன்சிகா தற்கொலை செய்துகொண்ட அடுத்த நாளிலேயே அவரது முகநூல் பக்கத்தில் தற்கொலைக் குறிப்பு வெளிவருமாறு பதிவிட்டுச் சென்றுள்ளார்.
அதில், வரதட்சிணை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும், அவரின் வீட்டில் இருந்து 6 பக்கங்கள்கொண்ட, மலையாளத்தில் எழுதப்பட்ட தற்கொலைக் குறிப்புக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.
விபன்சிகாவின் மகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக மகளின் முகத்தில் தலையணையை அழுத்தி கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

