புத்ரஜெயா,
எங்கள் அரசாங்கம் மக்களுக்கு ஆட்சித் தீர்மானங்களைப் பற்றி நேரடி அணுகலையும், வெளிப்படைத்தன்மையையும் வழங்கும் வகையில், தகவல் அறியும் சட்டத்தை (Freedom of Information) இந்த ஆண்டு முடிவிற்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
“இந்தச் சட்டம், நாட்டு மக்களிடம் நம்பிக்கையை வளர்க்கவும், ஜனநாயகத்தில் அவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் முக்கியமான ஓர் அடிக்கல்,” என்று அவர் கூறினார்.
இச்சட்டம், மக்களுக்கு அரசு முடிவுகள் தொடர்பான முக்கியமான தகவல்களை முறையாகப் பெற உதவியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். நாடாளுமன்றத்திற்குள் விரைவில் இது கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இது போல நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்ட நாடாளுமன்ற சீர்திருத்தங்கள், அனைத்து மலேசியர்களையும் உள்ளடக்கிய நியாயமான நிறுவனங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் முழுமையான முயற்சிகளாக இருக்கின்றன என அவர் வலியுறுத்தினார்.
இன்று புத்ரஜெயாவில் நடைபெற்ற சர்வதேச நல்லாட்சி மற்றும் நேர்மைக் கருத்தரங்கில் (International Conference on Governance and Integrity 2025) நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் இவ்வாறு உரையாற்றினார்.




