Last Updated:
பேராசிரியர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி மாணவி விபரீத முடிவை எடுத்துள்ளார்.
ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில் ஃபக்கிர் மோகன் எனும் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில், 20 வயது மாணவி ஒருவர் பி.எட். படித்துவந்தார். இவரது துறை தலைவராக சமிர் குமார் சாஹு என்பவர் இருந்துவருகிறார்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி, அந்த மாணவி, கல்லூரி புகார் குழுவில், தனது துறை தலைவர் சமிர் குமார் சாஹு மீது பாலியல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகார் மீது கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், 12ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி உட்பட சக மாணவர்கள் இணைந்து கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக, பாதிக்கப்பட்ட மாணவி தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். உடனே அருகே இருந்த ஒரு நபர், அந்த மாணவியை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அவர் மீது தீப்பற்றவே அவரால் மாணவியை தீயில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.
பின் ஒருவழியாக தீயை அணைத்து மாணவியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 95% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த மாணவி மேல் சிகிச்சை காரணமாக பாலசோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்திவருகின்றனர். அதேபோல், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழு மாணவி கொடுத்த புகார் குறித்தும், அவரது தற்கொலை குறித்தும் விசாரித்து விரிவான அறிக்கையை கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Odisha (Orissa)
July 15, 2025 6:59 PM IST
பேராசிரியர் மீது புகார்.. கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம்.. தனக்குத்தானே தீவைத்து மாணவி விபரீத முடிவு


