Last Updated:
டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத் 6 நாட்களுக்கு முன் மாயமானார்.
6 நாட்களுக்கு முன் திடீரென மாயமான டெல்லி பல்கலைக்கழக மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சினேகா தேப்நாத். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆத்ம ராம் சனாதான தர்ம கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலைப் பட்டம் படித்து வந்தார். தெற்கு டெல்லியில் உள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7ம் தேதி திடீரென மாயமானார். அன்றைய தினம் காலை தனது குடும்பத்தினருடன் செல்போனில் பேசிய சினேகா, தனது தோழியை டெல்லியிலுள்ள சராய் ரோஹிலா ரயில் நிலையத்திலிருந்து ஊருக்கு அனுப்பி வைக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், காலை 5 மணிக்கு கார் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி வீட்டிலிருந்து கிளம்பியவர் அதன் பிறகு மாயமாகி விட்டார். இதனைத்தொடர்ந்து காலை 8.45 மணிக்கு சினேகாவின் தொலைபேசி எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது. அதன்பிறகு வெகுநேர மாகியும் அவர் அறைக்கு திரும்பாமல் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து துரித நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் கேப் டிரைவரிடம் விசாரித்தபோது, சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக கூறியிருக்கிறார். அதேபோல் அந்த பாலத்தின் அருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தில் இருந்து காணாமல் போனதாகவும் அப்பகுதியிலிருந்த சிலர் கூறி இருந்தனர்.
இதையடுத்து நிகம்போத் காட் பகுதி முதல் நொய்டா வரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது. இந்த நிலையில் கீதா காலனி மேம்பாலம் அருகே யமுனை ஆற்றில் ஒரு பெண் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அது 6 நாட்களுக்கு முன்பு மாயமான சினேகாவாக இருக்கலாம் என கருதிய போலீசார் அவரது குடும்பத்தினரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர். அவர்கள் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது சினேகா என்பதை உறுதிபடுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா தேப்நாத் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஏற்கனவே கடிதம் எழுதி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மாணவி உண்மையில் தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
———————–
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
——————–
July 14, 2025 6:07 PM IST


