Last Updated:
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் லாட்ஸ் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 387 ரன்களுக்கு ஆட்டம் இழந்தன. இந்திய அணி நேற்று 3 ஆவது நாளில் தனது ஆட்டத்தை முடித்த பின்னர் கூடுதலாக 6 நிமிடங்கள் மீதம் இருந்தன. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் ஆகியோர் களமிறங்கினர்.
நாள் முழுக்க ஃபீல்டிங் செய்ததால் சற்று களைத்துப் போயிருந்த அவர்கள் வேண்டுமென்றே ஒவ்வொரு பந்துகளை எதிர்கொள்ளும் போதும் தாமதம் செய்தார்கள். 6 நிமிடங்களில் குறைந்தது இரண்டு ஓவர்கள் வரை வீசி முடிக்கலாம் என்ற திட்டத்தில் இந்திய அணி இருந்தது.
ஆனால் ஒரு ஓவருக்குள் நேரத்தை கடத்துவதற்கு இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அவ்வப்போது சிறிது ஓய்வு எடுக்கத் தொடங்கினர். இது இந்திய அணி வீரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராலியிடம் வாக்குவாதம் செய்ய தொடங்கினார்.
அப்போது நடுவர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவின. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களின் செயல்பாடு குறித்து கே.எல். ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது-
நாங்கள் 2 ஓவர்கள் வீச திட்டமிட்டு இருந்தோம். 6 நிமிடங்கள் மீதம் இருந்தன. நாள் முழுக்க ஃபீல்டிங் செய்துவிட்டு 2 ஓவர்கள் பேட்டிங் செய்ய வருவது என்பது சற்று களைப்பாகத்தான் இருக்கும். அதே நேரம் நாங்கள் விக்கெட்டை எடுத்தால் அன்றைய நாளை மிகச் சிறப்பாக முடிக்க கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்.
நான் பேட்ஸ்மேன்கள் தரப்பிலிருந்து அவர்களது செயல்பாடுகளை புரிந்து கொள்கிறேன். அங்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரியும் என்று விமர்சித்தார். இதற்கிடையே இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் வீரர்கள் களம் இறங்கியுள்ளனர்.
July 14, 2025 7:10 AM IST


