குழந்தைப் பருவம் முதலே தனது நிறத்தால் பல சங்கடங்களை எதிர்கொண்டவர் தான் ரேச்சல். அவர் குடும்பத்தில் மற்றவர்கள் அனைவரும் மாநிறத்தில் இருக்க, இவருக்கு மட்டுமே தமிழரின் நிறம் வாய்த்திருந்தது. அவரது வீட்டிலேயே கூட “உன்னை ஹாஸ்பிடலில் இருந்து மாற்றி எடுத்து வந்துவிட்டோம்” என்று கிண்டல் செய்வார்கள் என சிரித்த முகத்துடன் கூறுவார் ரேச்சல்.
சிறு வயதிலிருந்து நிறத்தைக் காட்டிப் போடப்பட்ட தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாய் மாற்றிய ரேச்சல், படிப்படியாக மாடலிங் துறையில் உயர ஆரம்பித்தார். கருப்பு நிறம் உள்ளவர்களைக் குறைவாகவும், வெண்மை நிறம் கொண்டவர்களை உயர்வாகக் கருதும் சமுதாயத்தில் அதனை மாற்றி மாடலிங் துறையில் பல பட்டங்களைப் பெற்றார் ரேச்சல்.
மிஸ் புதுச்சேரி 2021, மிஸ் பெஸ்ட் ஆட்டிடியூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019 என அழகு போட்டிகளில் விருதுகளை அடுத்தடுத்துக் குவித்தார். லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றுள்ள ரேச்சல், மாடலிங் துறையில் டார்க் குயின் என்ற பட்டத்தோடு வலம் வந்தார்.
அதுமட்டுமின்றி பல்வேறு பட்டிமன்றங்களில் பங்கேற்று பெண்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். ரேச்சலுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி 100 அடி சாலையில் உள்ள ஜான்சி நகரில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு சிறுநீரகம் சம்பந்தமான உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மாடலிங் போட்டிகளுக்குத் தயாராக முடியாமலும், டயட்டிங், உடற்பயிற்சி போன்ற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள முடியாமலும் தவித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மன அழுத்தம் ஏற்பட்டு தவித்து வந்த அவர், கடந்த 5-ஆம் தேதி, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிருக்கு போராடிய ரேச்சலைக் கண்டு அதிர்ந்துபோன அவரது தந்தை காந்தி, அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சான் ரேச்சல் திடீரென மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகிவிட்டார்.
பின்னர் சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய ரேச்சலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. அவரை மீண்டும் சிகிச்சைக்காக மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சான் ரேச்சல், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சான் ரேச்சல் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என விசாரித்து வருகின்றனர். பல்வேறு அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இளம் மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Puducherry (Pondicherry)
July 13, 2025 7:32 PM IST
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த கருப்பு அழகி சான் ரேச்சல்! வாழ்க்கையைப் பறித்த உடல் பிரச்சினை?

