சிலாங்கூர்:
சிலாங்கூரிலுள்ள ஈரச் சந்தைகலீல் பிடிக்கப்படும் ஒவ்வோர் எலிக்கும் 3 ரிங்கிட்டை அம்மாநில நகராண்மைக் கழகம் வெகுமதியாக வழங்குகிறது.
இந்த நடைமுறை, எலி ஒழிப்பு இயக்கத்தின் மூலம் பெக்கான் அம்பாங் சந்தையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எலிகள் இல்லாத வட்டாரமாக மாற்ற திட்டமிடப்படுவதாக அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம் நேற்று ஜூலை 9ஆம் தேதி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டது.
“சுற்றுப்புற தூய்மை, சுகாதாரம் என்பவற்றைக் கருத்தில்கொண்டு எலிகளை ஒழிக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைவோம்,” என்று மற்றொரு பதிவில் காண முடிகிறது.
இம்மாதம் 8ஆம் தேதி தொடங்கிய எலி ஒழிப்பு இயக்கம் 25ஆம் தேதி வரை தொடரும் என்றும், வார நாள்களில் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை பிடிக்கப்படும் எலிகளை ஈரச் சந்தையில் கொடுத்து அதற்குப் பதிலாகக் கடைக்காரர்கள் காசைப் பெறலாம்.
அதேநேரம் சாபா மாநிலத்தின் கோத்தா கினபாலுவில் உள்ள மத்திய சந்தையில் அதேபோல எலிகளைப் பிடித்து தருவோருக்கு 2 ரிங்கிட் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




