பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள், குடியுரிமையை நிரூபிக்க 11 ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை தேர்தலுடன் இணைத்ததற்காகத் தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கடுமையாக விமர்சித்தனர். தேர்தலுக்கு குறுகிய காலத்துக்கு முன்பு இந்த நடவடிக்கையை எடுப்பதற்கான காரணம் என்ன என்று வினவிய நீதிபதிகள், 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான 11 ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டையை இடம்பெறச் செய்யாதது ஏன் என்றும் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், ஆதாரை குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த முடியாது என்றார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முறை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்றும் வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், குடியுரிமையை சோதிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை என்றார்.
குடியுரிமை என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் நிலையில், அதில் எவ்வாறு தேர்தல் ஆணையம் தலையிட முடியும் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், குடியுரிமையை சோதிப்பதாக இருந்தால் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை முன்கூட்டியே தொடங்கியிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவில் வாக்காளராகத் தகுதி பெற குடியுரிமை சரிபார்க்கப்பட வேண்டியது அவசியம் என்று முறையிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஆதாரை வைத்து பெறப்படும் சாதிச் சான்றிதழ் செல்லும், ஆனால் ஆதார் செல்லாதா எனக் கேள்வி எழுப்பினர். பல அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்படும் அடிப்படை ஆவணங்களில் ஒன்றான ஆதாரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பது ஏன் என்றும் வினவினர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு ஓர் ஆண்டில் தொடங்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஏன் இந்த நடவடிக்கையை தொடங்கி உள்ளது என்று நீதிபதிகள், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள குறுகிய அவகாசமே இருப்பதால் பலர் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் பீகாரில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படாது என்று உத்தரவாதம் அளித்தார். பீகார் தேர்தலையொட்டி தற்போது பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவை முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டையை குடியுரிமை ஆவணப் பட்டியலில் சேர்க்க பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும், இதுதொடர்பாக ஒரு வார காலத்துக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
July 11, 2025 7:01 AM IST

